2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. 2011-க்குப் பிறகு உலகக் கோப்பையை 3-வது முறையாக வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், பும்ராவால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 114 ரன்கள் இலக்கை விரட்டும்போது 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. 2-வது ஒருநாள் போட்டியில் தோற்றே போனது. இந்நிலையில், இந்திய அணி நிர்வாகம் வீரர்களின் காயங்களைக் கையாள்வதில் சோடை போயுள்ளதாக கபில் தேவ் காட்டமாக விமர்சித்துள்ளார். பும்ராவுக்கு என்ன ஆயிற்று? அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன்னை மீட்டெடுத்து வருகிறார். ஆனால், அவரால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை.
ரிஷப் பந்த் காயமடைந்ததால் நம் டெஸ்ட் கிரிக்கெட்டும் சற்றே பின்னடைவு கண்டுள்ளது, ரிஷப் பண்ட் ஒரு நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டர். நான் காயமடையாமல் ஆடினேன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஆண்டுக்கு 10 மாதங்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். சந்தேகத்தின் பலனை இதற்கு அளித்தோமானால் அனைவரும் தங்கள் உடம்பை தாங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐபிஎல் பெரிய விஷயம்தான். ஆனால் அது வீரர்களை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுவதும் உண்டு. நான் இந்த விஷயத்தில் ஓபனாகவே இதைத்தான் கேட்கிறேன். சிறிய காயம் என்றால் முக்கியமான போட்டி என்று ஐபிஎல் போட்டியில் ஆட முடிகிறது. ஆனால், நாட்டுக்காக என்று வரும் போது ஓய்வு கேட்கின்றனர். விடுப்பு கேட்கின்றனர். வீரர்களால் எத்தனை போட்டிகளில் ஆட முடியும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும். கிரிக்கெட் வாரியத்திடம் ஏதோ தவறு இருக்கின்றது.இவ்வாறு கபில் தேவ் கூறினார்.