டெல்லி அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி 

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராகுல் காந்தி 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி அரசு பங்களாவை காலி செய்தார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு பதிலளிக்கும் விதமாக ராகுல்காந்தி

ப தில் கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், கடந்த 4 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அரசு பங்களாவில் தொடர்ந்து வசித்து வந்துள்ளேன். கடந்த காலங்களில் எனக்கு நிறைய நல்ல நினைவுகளை இந்த வீடு அளித்துள்ளது. அதற்கு நன்றி, அரசு உத்தரவுக்கு நான் கட்டுப்படுவேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன் சாலையில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி இன்று காலி செய்தார். பங்களாவை காலி செய்து சாவியை அரசிடம் ஒப்படைத்தார். அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் வசிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை உறுப்பினர் என்ற வகையில் சோனியா காந்திக்கு டெல்லி ஜன்பத் சாலையில் அரசு பங்களா கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது