தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4வது புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. இதனை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்.  விழாவில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் லோ.பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார், சார் ஆட்சியர் கௌரவ் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சங்கர், தாசில்தார் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் வாசிப்பு பழக்கம் பற்றி பல்வேறு தலைப்புகளில் மக்களிடையே தங்களது கருத்துக்களை பரிமாறி கொள்ள இருக்கிறார்கள். இந்த புத்தக திருவிழாவில் ஏறத்தாழ 110 புத்தக பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை கொண்டு வந்து கண்காட்சியாக வைக்கப்பட இருக்கிறது. மேலும், வருகிற 28ம் தேதி மண் சார்ந்த கலைஞர்கள் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொள்ளும் நெய்தல் கலை நிகழ்ச்சிகள் தொடங்க இருக்கிறது.