எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து பேசி வியூகம் வகுக்க வேண்டும் என மம்தா வலியுறுத்தினார். கடந்த மாதம் அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக்குடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். கொல்கத்தா: மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில், முதல்வர் மம்தா பானர்ஜியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வியூகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பிறகு மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடையே பேசியதாவது:- இன்றைய விவாதம் மிகவும் சாதகமாக அமைந்தது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து பேசி வியூகம் வகுக்க வேண்டும். முதலில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பாஜக ஜீரோ ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்போது ஊடகங்களின் ஆதரவு மற்றும் பொய்களால் அவர்கள் ஒரு பெரிய ஹீரோவாக உருவாகி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் காங்கிரசின் ஈடுபாடு குறித்து கேட்டபோது, ‘அனைத்து கட்சிகளும் இதில் ஈடுபட்டுள்ளன’ என்று மம்தா பானர்ஜி பதிலளித்தார். இதேபோல் கடந்த மாதம் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.