திருச்சி காவேரி மருத்துவமனையில்
12 வயது சிறுவனுக்கு ஏபிஒ சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் அசத்தல் திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குமு 12 வயது சிறுவனுக்கு ஏபிஒ இணக்கமற்ற சிறுநீரகம் பொருத்துவதற்கான புரட்சிகரமான சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.இந்தியாவில் இத்தகைய அறுவைசிகிச்சை செயல்முறை ஒரு அரிதான நிகழ்வு ஆகும்.இந்த சிகிச்சை பற்றி திருச்சி காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன், கதிர்வீச்சு சிகிச்சையியல் துறையின் தலைவரும், முதுநிலை ஆலோசகருமான டாக்டர், செந்தில்வேல் முருகன் கூறியதாவது:மரபணு கோளாறு காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ஒரு ஆண்டாக டயாலிசிஸ் சிகிச்சையை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் செய்து வந்தார்.இந்த நிலையில் தங்களது மகனுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளுடன் திருச்சியிலுள்ள காவேரி மருத்துவமனையை இச்சிறுவனது பெற்றோர்கள் அணுகினர்.எனினும், பெற்றோர்களது இரத்த வகையானது, நோயாளி மகனின் இரத்தவகைக்குப் பொருத்தமானதாக இருக்கவில்லை. மிக கவனமான பரிசீலனைக்குப் பிறகு ஒ இரத்தவகையைச் சேர்ந்த அவரது மகனுக்கு ஏ இரத்தவகையைச் சேர்ந்த அவனது தந்தை, அவரது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது, அச்சிறுவனுக்கான சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சைக்கு இது ஒன்றுதான் கிடைக்கக்கூடிய ஒரே விருப்பத்தேர்வாக இருந்தது. அதன் காரணமாக, ஏபிஓ இணக்கமற்ற சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர். டி. ராஜராஜன் மற்றும் சிறுநீரகப் பாதையியல் துறையின் தலைவர் டாக்டர். செந்தில்குமார், ஆகியோர் தலைமையின் கீழ் சிறுநீரகவியல் துறை சிறப்பு நிபுணர் டாக்டர். ஜி. பாலாஜி மற்றும் சிறுநீர்ப்பாதையியல் நிபுணர் டாக்டர். சசிகுமார் போன்ற திறன்மிக்க மருத்துவர்கள் குழு, இந்தியாவிலேயே மிக குறைந்த செலவில் கடந்த ஜனவரி 19ந் தேதியன்று, அரிதான இந்த சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்திருக்கிறது.இதுகுறித்து சிறுநீரகவியல் துறை தலைவர் டாக்டர். டி. ராஜராஜன் கூறியதாவது: உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட்ட இந்த சிறுவனின் உடல்நிலையானது தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வார காலத்திற்கு மிக நெருக்கமாக கண்காணிக்கப்பட்டது. பொருத்தப்பட்ட மாற்று உறுப்பு நிராகரிப்பு போன்ற அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய சிக்கல்கள் பெரும்பாலும் சிகிச்சை செயல்முறை நிகழ்ந்த முதல் மாதத்திற்குள் நிகழ்கின்ற நிலையில் இந்த சிறுவனுக்கு அத்தகைய சிக்கல்கள் எதுவும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஏற்படவில்லை. இதன் காரணமாக, 8 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து இச்சிறுவன் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான். புதிதாகப் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தின் இயக்கத்தை கண்காணிப்பதற்காக உரிய காலஅளவுகளில் பரிசோதனைகள் செய்யப்பட்டன. தனது சிறுநீரகத்தை மகனுக்கு தானமாக அளித்த தந்தையும், அது பொருத்தப்பட்டிருக்கும் மகனும் வழக்கமான சிறுநீரக செயல்பாட்டுடன், நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து இருக்கின்றனர். இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.