.
சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் அவர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுடர் தொண்டு நிறுவனமானது பசுமைக்காவலர் விருது வழங்கியது.
கொமாரபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நிர்வாக ஆணை பெறப்பட்டு இதுவரை 4200 மரக்கன்றுகள் நடப்பட்டு, அந்த மரக்கன்றுகளுக்கு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களைக் கொண்டு தினந்தோறும் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து மரங்களாக வளர்ந்து நிற்கின்றன. இந்த ஊராட்சியில் பத்தாயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளனர். புவி வெப்பமாதலை தடுப்பதற்காக அரசும், தன்னார்வ அமைப்பினரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்த தருணத்தில் கொ மாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலம் செய்துள்ள இந்த சாதனையை பாராட்டி சுடர் தொண்டு நிறுவனமானது உலக சுற்றுச்சூழல் தினத்தில் பசுமை காவலர் விருது வழங்கியது.
இந்த மரக்கன்றுகளை நட்டு பராமரித்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சமர்ப்பிப்பதாக தனது ஏற்புரையில் ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கே சி பி இளங்கோ, சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிசாமி, பற்குணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், சுடர் அமைப்பின் இயக்குனர் எஸ்.சி.நடராஜ், வார்டு உறுப்பினர்கள் வடிவேலு, சுரேஷ், விக்னேஷ்வரி,கதிரி, சாவித்திரி, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஊராட்சி மன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன..