கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் நீர் நிலைகள் அருகில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், செய்தியாளர்களுடன் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நீர் நிலைகள் அருகில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, சேதமடைந்துள்ள நீர் நிலைப்பகுதிகளை சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், செய்தியாளர்களுடன் பயணம் மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை சீரமைப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய சானல் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குட்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்யவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் இருந்து வெளியேற்றி மக்கள் தங்கும் இடங்களை ஆய்வு மேற்கொள்ளவும். சார் நிலை அலுவலர்களின் அலைபேசி எண்களை சரிபார்த்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அச்சார்நிலை அலுவலர்களுடன் ஆய்வு செய்யவும் நீர்வழி தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றிட ஏற்கெனவே நீர் ஆதாரத் துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் இருப்பில் இருக்கும் நீர் வெளியேற்றும் பம்புகளின் ஆற்றல் 15 குதிரை திறன் அளவுக்கு மேல் இருப்பதையும் அவற்றின் செயல்பாட்டுத்திறனையும் ஆய்வு செய்திடவும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. .
மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள். ஜேசிபி. மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றின் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட கலிங்கராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி மற்றும் ஏழுதேசப்பற்றி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் பேரிடர் காலங்களில் நீர் நிலைப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பத்திரமாக மீட்டு தங்க வைப்பதற்கான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பணமுகம் வழியாக ஓடும் கால்வாய் தாமிரப்பரணி ஆற்றில் கலக்கும்போது கரையோரப்பகுதிகளில் தண்ணீர் பெருகுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மங்காடு சப்பாத்து பாலத்தின்கீழ் அடைப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி சீராக தண்ணீர் செல்ல வழிவகை செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு தாமிரபரணி ஆற்றுத்தண்ணீர் சென்றடையும் பகுதியான வைக்கலூர், பரக்காணி பகுதி கரையோரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டுள்ளது. இவ்வாறு செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி.என்.ஸ்ரீதர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் கிள்ளியூர் வட்டாட்சியர் அனிதா குமாரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
வெளியீடு : கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ஜாண் ஜெகத் பிரைட் கன்னியாகுமரி மாவட்டம்,