கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 202 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர், அறிவுறுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், திருவிதாங்கோடு கிராமம், பருத்திக் காட்டுவிளை பகுதியை சேர்ந்த .சந்திரன் என்பவர் கடந்த 06.11.2021 அன்று குளத்தில் மூழ்கி உயிரிழந்தமைக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை அன்னாரது வாரிசுதாரருக்கும், தொழில்படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கான ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையினை இரண்டு மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.21 ஆயிரத்து 358/- மதிப்பிலான வீல் சேர், காதொலி கருவி, சி.பி.வீல் சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், விளங்கோடு வட்டம், இடைக்கோடு கிராமத்தை சார்ந்த செல்வி.ஆஷிகா அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500-க்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா. தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தே.திருப்பதி, மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர் சிவசங்கர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.