அரசின் முதலமைச்சர் திறந்து வைத்த பெரும்பான்மையான பணிகள் அம்மாவின் அரசால் துவக்கப்பட்டவை. தமிழக மக்கள் அனைவரும் திருப்தியாக இருப்பதாக நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் கனவுலகில் மிதக்கிறார். சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து, பின்புற வாசல் வழியே தப்பித்தோம், பிழைத்தோம் என்று மெகா கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த தி.மு.க, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், அம்மாவின் அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திறப்பு விழா கண்டு கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை என்று சொன்ன தி.மு.க அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், அம்மாவின் அரசால் கட்டப்பட்ட சேலம் மாநகர் பேருந்து நிலையத்திற்கு தனது தந்தை பெயரைச் சூட்டி மகிழ்ந்து உள்ளார்.  நேரு கலையரங்கம், வ.உ.சி. மார்க்கெட், பெரியார் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம், ஆனந்தா அடுக்கு மாடி வாகன நிறுத்துமிடம், இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம், ஓமலூர்-மேச்சேரி நான்கு வழிச் சாலைகளாக அகலப்படுத்துதல், மேக்னசைட் மற்றும் ஓமலூர் ரெயில்வே பாலங்கள், சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கு சொந்தக் கட்டிடம் என்று, தி.மு.க அரசின் முதலமைச்சர் திறந்து வைத்த பெரும்பான்மையான பணிகள் அம்மாவின் அரசால் துவக்கப்பட்டவை. மேலும், அம்மாவின் அரசால் தலைவாசலில் துவக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பண்ணையை தமிழ் நாட்டிலேயே மிகச் சிறியதாக மாற்றிய பெருமையும்; ஏற்காடு கூட்டுறவு அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனத்தை மூடிய பெருமையும்; மேட்டூர் அணை நிரம்பி கடலிலே வீணாகக்கலக்கும் வெள்ள உபரி நீரை, நீரேற்று பாசனத் திட்டம் மூலம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை முடிக்காமல் கிணற்றில் போட்ட கல்லாக மாற்றிய பெருமையும்;  அரசாணை வெளியீடு தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அம்மா மினி கிளினிக்குகளுக்கு மூடுவிழா நடத்தியதும் இந்த நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரையே சாரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலம் மாவட்டத்திற்கு என்று புதிதாக எந்த பெரிய திட்டத்தையும் கொண்டு வராத தி.மு.க அரசின் முதலமைச்சர், மக்கள் பணி செய்யவே நேரமில்லை என்று திருவாய் மலர்ந்திருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது. எனது தலைமையிலான அம்மாவின் அரசால் கொண்டு வரப்பட்டு இரண்டு வருடகால தாமதத்திற்குப் பிறகு, திறப்பு விழா நடத்தியுள்ள திட்டங்களை, ஏதோ தான் கொண்டு வந்தது போல் ஸ்டிக்கர் ஒட்டி நாடக மாடி, ஊரில் கல்யாணம், மார்பில் சந்தனம் என்ற ரீதியில் நகர்வலம் வருகிறார். இதையும் படியுங்கள்: சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் கட்டணம் 2 மடங்கு உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி துப்புரவுத் தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் இந்த அரசைக் கண்டித்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றார்கள். தமிழக மக்கள் அனைவரும் திருப்தியாக இருப்பதாக நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் கனவுலகில் மிதக்கிறார். கொங்கு மண்டல மக்களின் நூற்றாண்டு கனவான அத்திக்கடவு திட்டம் 85 சதவீத பணிகள் அம்மாவின் அரசில் முடிவடைந்திருந்த நிலையில், விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்வதை மக்கள் நன்கு அறிவார்கள். அதேபோல், சென்னை மெட்ரோ ரெயிலின் இரண்டாம் திட்டத்தைக் கொண்டு வந்தது அம்மாவின் அரசு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ‘மே’ மாத ஊதியம் வழங்கப்படாது என்ற அரசின் அறிவிப்பு, பள்ளி ஆசிரியர்கள் மீது இவர்கள் கொண்டுள்ள உண்மையான அக்கறையை வெளிக் காட்டியுள்ளது. மீதமுள்ள 35 மாத காலத்தையும், பொய்யையும், புனை சுருட்டையும் மூலதனமாகக் கொண்டு அப்பாவி தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி, ஆட்சி அதிகாரத்தில் தொடரலாம் என்ற இருமாப்பில் இருக்கும் திராவக மாடல் ஆட்சியாளர்களுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.