திருநெல்வேலி சந்திப்பு சாலைத் தெரு மேகலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.சரவணன். இவரது மகள் சந்தன பிரியா. இவர் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவரை 2014ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து, திருநெல்வேலி மாவட்டம் பாளையஞ்செட்டிகுளம் பிரபுநகர் விரிவாக்கப் பகுதியில் காதல் கணவர் தங்கபாண்டியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

   இந்நிலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட சந்தன பிரியா, காதல் கணவர் தங்கபாண்டி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மா.மாரியப்பபாண்டியன் முன்னிலையில், நெல்லை மாநகரப் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில் சந்தனப்பிரியா கூறியிருப்பதாவது: நானும் எனது காதல் கணவர் தங்கபாண்டியும் 2014 ஆம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நாங்கள் எங்கள் திருமணத்தை பதிவு செய்து சான்று பெற்றுள்ளோம். எனது கணவர் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.  இந்நிலையில் எனது தகப்பனார் எஸ்.சரவணன் மற்றும் தாயார் எஸ்.வேலம்மாள், எனது காதல் கணவரின் சமுதாயப் பெயரைச் சொல்லி, “நீ அவனுடன் வாழதே! எங்களுடன் வந்துவிடு; இல்லையென்றால் கூலிப்படையை வைத்து ஒரு வார காலத்திற்குள் உன்னையும், உனது கணவரையும் கொன்று விடுவோம்”  என்று மிரட்டுகிறார்கள். நாங்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறோம்.

    எனவே, எனக்கும் எனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவும் எனது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இளம்பெண் சந்தன பிரியா, நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.