கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் மூட்டைகளை சேமிப்பதற்காக தற்காலிக கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்குப் போதிய மேற்கூரை இல்லை என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் சுமார் 12,000 டன் நெல் மூட்டைகள் நனைந்து நாசமானதாக செய்திகள் வெளியாகின. இதை தொர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு சேமிப்பு கிடங்கு பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதாக கூறப்பட்டதில் உண்மை இல்லை என்றும், எனினும் நிரந்தர தீர்வாக கிருஷ்ணகிரி அருகே 7 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பான கிடங்கு அமைக்கப்படும் என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவது தொடர்வண்டி வாயிலாக இந்த பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது என்றும் அவ்வாறு கிருஷ்ணகிரி பகுதியில் அமைக்கப்பட்டால் அதிக தொலைவு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் நிலை ஏற்படும் என்பதால், அரசு உடனடி கவனம் செலுத்தி பாதுகாப்பான நெல் சேமிப்பு கிடங்கை ஓசூர் பகுதியில் அமைக்க வேண்டும் என்று கூறி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி கூறும் பொழுது,
ஏற்கனவே இங்கு திறந்தவெளியில் சேமிக்கப்பட்டு வைத்திருந்த நெல் மூட்டைகள் சுமார் 30 சதவிகிதம் நனைந்து சேதம் ஆகியிருக்கிறது. தற்பொழுது மாவட்ட ஆட்சியர் இதற்கான சேமிப்பு கிடங்கை கிருஷ்ணகிரியில் அமைப்பதாக கூறியிருக்கிறார். இந்தப் பகுதியில் தான் தொடர்வண்டி வசதி இருப்பதால் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அருகிலேயே சேமிப்பதற்கு ஏதுவாக ஓசூரிலேயே சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்றும் அரசு உடனடியாக இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி கூறும் பொழுது,
இங்கு திறந்தவெளியில் சேமிப்பு கிடங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்டு இருக்கிறது பலமுறை அரசு கவனத்திற்கு எடுத்துச் சென்ற பொழுதும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் ஆகி இருப்பது என்பது உண்மை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் தற்போது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பது உண்ணாவிரதம் போன்ற கடுமையான போராட்டங்களை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்றும் எச்சரித்தார்.