சென்னை போரூர் பூந்தமல்லி மவுண்ட் சாலையில் இரட்டை ஏரி சிவன் கோவில் எதிரில் சாலையோரமாக மீன் வியாபாரம் செய்து வந்த மீன் கடைகளை அகற்றிய வளசரவாக்கம் மண்டல அதிகாரிகளை கண்டித்து ஜெய் சிவ சேனா மற்றும் பாரதிய வியாபாரிகள் சங்கம் மீனவர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போரூர் குன்றத்தூர் சாலையில் அமைந்துள்ள மின்சார அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய வியாபாரிகள் சங்கம் மாநிலத் தலைவர் சசிகுமார் ஜி தலைமை தாங்கினார். ஜெய் சிவ சேனா அமைப்பின் மாநில தலைவர் செந்தில் ஜி முன்னிலை வகித்தார்.
இதில் இந்து சேவா சங்க நிறுவன தலைவர் ஆவடி.ஸ்டாலின்,
இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் பூவை ராஜாஜி கலந்து கொண்டு மாற்று இடம் வழங்காமல், மீன் கடைகளை அகற்றிய வளசரவாக்கம் மண்டல அதிகாரிகளை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக போரூர் ரவுண்டானாவில் இருந்து பாரதிய வியாபாரிகள் சங்க மீனவர் பிரிவு நிர்வாகிகள், மீன் கடை வியாபாரிகள் ஆகியோர் பேரணியாக புறப்பட்டு போரூர் குன்றத்தூர் சாலையில் அமைந்துள்ள மின்சார அலுவலகம் அருகே வந்து நின்றபடி வளசரவாக்கம் மண்டல அதிகாரிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இது பற்றி மீன் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கூறுகையில்
பல ஆண்டுகளாக தொடர்ந்து போரூர் இரட்டை ஏரி சிவன் கோவில் எதிரே 50க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் கடை அமைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது போரூர் பூந்தமல்லி மவுண்ட் சாலையில் மெட்ரோ ரயில் பணி காரணத்தை காட்டி சாலையோரம் வியாபாரம் செய்து வந்த 50 மீன் கடைகளையும் திடீரென வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் அப்புறப்படுத்தி விட்டனர்.
இதனால் மீன் வியாபாரம் செய்யும் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மீன் கடை அமைக்க கூடாது என்றால் மாற்று இடம் வழங்க வேண்டும். மாற்று இடம் குறித்து கேட்டால் மாற்று இடம் எல்லாம் வழங்க முடியாது என மண்டல அதிகாரிகள் கூறுகின்றனர்.
மீன் வியாபாரத்தையே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் எங்களுக்கு தயவுகூர்ந்து மீண்டும் மீன் வியாபாரம் செய்வதற்கு மாற்று இடம் வழங்க வேண்டும். என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம் என இவ்வாறு தெரிவித்தனர்