செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கடம்பூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. சுமார் 338 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவிலேயே  முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைய உள்ளது. லண்டனில் உள்ள பிரபல கியூ பூங்காவுடன் இணைந்து புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டு பூங்கா பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அதனை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செங்கல்பட்டு வனவியல் விரிவாக்க மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு வகையான மரம், செடிகளை பார்வையிட்டார். 

     இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன், வனத்துறையில் மிக முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்று. 137 ஹெக்டேர் பரப்பளவில் சர்வதேச பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இந்த மாதிரி பூங்கா எங்கேயும் இல்லாத வகையில் பிரம்மாண்டமான தாவரவியல் பூங்காவை நிறுவ உள்ளோம். தற்போது விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட உள்ளது. தமிழகத்தில் வளரக்கூடிய வெவ்வேறு வகையான தாவரங்களை வளர்க்கப்பட உள்ளது. இதற்கான முதல் கட்ட பணிகள் தற்போது துவங்கி உள்ள நிலையில் முடிவடைவது குறித்து தற்போது தெரிவிக்க இயலாது எனவும், இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த இது போன்ற பூங்கா அமைக்கப்பட உள்ளதால் கால நிர்ணயத்தை முன்னரே கூற முடியாது என தெரிவித்தார். செங்கல்பட்டு  சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மறைமலைநகர் நகரமன்ற தலைவர் ஜே. சண்முகம் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்