திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ராபாளையத்திலிருந்து முள்ளண்டிரம் செல்லும் சாலையில் அனுமதியில்லாமல் ஏரி மண் எடுத்துச்சென்ற டிப்பர் லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

  ஆரணி அடுத்த அக்ராபாளையத்திலிருந்து முள்ளண்டிரம் செல்லும் சாலையில் வட்டாட்சியர் மஞ்சுளா தலைமையில் வருவாய் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதியில்லாமல் கள்ளத்தனமாக டாரஸ் டிப்பர் லாரியில் அத்தியூர் ஏரியிலிருந்து மண் எடுத்து சென்றவர்களை தடுத்தனர். அப்போது வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி விட்டார். வாகனத்தின் உரிமையாளர் மணி மகன் ஜெகன் என்றும், ஆலந்தாங்கல் கிராமம் எனவும்  விசாரணையில் தெரியவந்தது. எனவே வாகனத்தின் உரிமையாளர்  மற்றும் அடையாளம் தெரியாத வாகன ஓட்டுநர் மீது உரிய பிரிவுகளின் கீழ் கோட்டாட்சியர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்தார். மேலும் வாகனத்தை பறிமுதல் செய்து  நீதிமன்ற உத்தரவு வரும் வரை ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அக்ராபாளையம் வருவாய் ஆய்வாளர், வெட்டியாந்தொழுவம் , கண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.