கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்கதுமான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ சந்திர சூடஸ்வரர் திருக்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
முன்தினம் கணபதி ஓமத்துடன் துவங்கிய மகா கும்பாபிஷேக உற்சவத்தில், நேற்று யாகசாலை பூஜைகள் மற்றும் வான வேடிக்கைகள் வெகு விமர்சையாக நடைபெற்றன
இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய முக்கிய நிகழ்வான ராஜகோபுர மகா கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது. இதில் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்ட புனித தீர்த்தங்கள் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரத்தின் மீது எடுத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து மந்திரங்கள் முழங்க புனித நீரானது கோபுரத்தின் மீது உள்ள கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் உட்பட ஆன்மீக அன்பர்களும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். அண்டை மாநிலங்களான கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து கலந்து கொண்டனர்.
அப்பொழுது கங்கை, யமுனை, காவேரி நர்மதா, கோதாவரி உள்ளிட்ட 11 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களை எடுத்து வந்து ஹெலிகாப்டரில் வாயிலாக மலர்கள் மற்றும் தீர்த்தங்கள் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டன.
அது சமயம் ஓம் நமச்சிவாயா…. அண்ணாமலையாருக்கு அரோகரா….சம்போ மகாதேவா…. என்ற திருநாமங்கள் விண்ணைப் பிளந்தது.
மேலும் பக்தர்கள் வசதியாக இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவதற்கு ஏதுவாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
இந்த மகா கும்பாபிஷேக விழாவையொட்டி சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.