சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கம் ஸ்ரீ நாராயணா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை ஆலய திருப்பணி குழுவினர் நாராயணா நகர் பகுதி வாழ் மக்கள், ஆன்மீக அன்பர்கள், உபயதாரர்கள், கிராம பெரியவர்கள் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூன் 25ஆம் தேதி அன்று முகூர்த்த பந்தக்கால் பூஜை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து ஜூலை மூன்றாம் தேதி முதல் கால யாக பூஜை தொடங்கி, ஜூலை நான்கு, ஜூலை ஐந்தாம் தேதி ஆகிய மூன்று நாட்கள் யாக வேள்வி நடைபெற்று, நான்கு கால யாக பூஜை நடைபெற்றது.
சர்வ சாதகம் சிவஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாக வேள்வியில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க நான்காம் கால யாக வேள்வி நடத்தி யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
யாக வேள்வியின் இறுதியில் மகா பூர்ணஹாதி நடைபெற்று, யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கும்ப கலசங்களில் இருந்த புனித நீரானது நாதஸ்வரம், தவில் இசையுடன் ஆலயத்தை வலம் வந்து, ஸ்ரீ செல்வ சித்தி விநாயகர் ஆலய மூலவ விமான கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ செல்வ சித்தி விநாயகர் மற்றும் முருகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விஷ்ணு உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மீதும் புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு பூஜையுடன் தீப ஆராதனை நடைபெற்றது.
கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீரானது கும்பாபிஷேக விழாவை காண வந்திருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மூலவரான ஸ்ரீ செல்வ சித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் ஒன்றிய கவுன்சிலர் ஏசுபாதம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், நீர்,மோர் ஆகியவை வழங்கப்பட்டது