காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு குஜராத் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ரூபி ஆர்.மனோகரன் தலைமையில் நாங்குநேரி டோல்கேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் மத்திய அரசு மற்றும் மோடியை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் திடீரென நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் திருவனந்தபுரம் பைபாஸ் சாலையில் நாங்குநேரி டோல்கேட் அருகே சாலை அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், மகளிர் அணி மாநில நிர்வாகி குளோரிந்தாள், வட்டாரத் தலைவர்கள் நாங்குநேரி வாகை துரை, பாளையங்கோட்டை நளன், கணேசன், மாவட்ட துணைத் தலைவர் செல்லப்பாண்டி, மாவட்டச் செயலாளர் செங்குளம் வேலையா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அழகிய நம்பி, மாவடி சந்திரசேகர், ஆரைக்குளம் முருகேசன், ஏர்வாடி ரீமா பைசல், களக்காடு ஜார்ஜ் வில்சன், தாழைகுளம் ராஜன், செல்வின் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 85 காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நாங்குநேரி டி.எஸ்.பி., ஜெபராஜ், கூடுதல் டி.எஸ்.பி., பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் நாககுருசாமி உள்ளிட்ட காவல்துறையினர் கைது செய்து நாங்குநேரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.