மதுபானப்பாட்டில் உடைப்பு போராட்டம்!
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: திராவிட முன்னேற்றக் கழக அரசு 2021ஆம் ஆண்டு தேர்தலில் அறிவித்தது போல ஆட்சிக்கு வந்த பின்னர் முதலாவது நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தும், இரண்டாவதாக டாஸ்மாக்கை தடை செய்தும், மூன்றாவதாக மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திலும் கையெழுத்து இடுவார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்பொழுது மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். அதன்படி 90 சதவீத பெண்கள் இத்திட்டத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசு மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமையை இழக்க நேரிடும். எந்த பெண்களும் ஆயிரம் ரூபாய் கேட்கவில்லை. இந்நிலையில் திமுக அரசு ஓட்டுக்காக 1000 ரூபாய் தருகிறோம் என்று அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இன்று மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதனால் தற்போதைய திமுக அரசு பொதுமக்களின் வெறுப்பிற்கும், பெண்களின் கோபத்திற்கும் ஆளாகி உள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வருகிற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் 100 பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். மேலும் வருகிற 15-ஆம் தேதிமுதல் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடும் வகையில் அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு பெண்களைத் திரட்டி அவர்கள் தலைமையில் மதுபானப் பாட்டில்களை உடைக்கும் போராட்டம் மூன்று, நான்கு கட்டங்களாக நடத்தப்படும். இவ்வாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி செய்தியாளரிடம் தெரிவித்தார். அப்போது புதிய தமிழகம் கட்சி நெல்லை மாவட்டச் செயலாளர் முத்தையா இராமர், மண்டல செய்தி தொடர்பாளர் தங்க ராமகிருஷ்ணன் மாவட்ட இணைச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் சி.குமார், முன்னாள் மாவட்டச் செல்லப்பா உள்பட பலர் உடன் இருந்தனர்.