தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் பெருவிழா ஆண்டு தோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெருவிழா அன்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்வதால், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

           மேலும், முக்கிய நிகழ்வுகளை கொண்ட ஆண்டுகளில் மட்டும் பனிமய மாதா கோவில் திருவிழாவில் தங்கத்தேர் பவனி நடைபெறும். தூத்துக்குடி மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு 16-வது தங்கத்தேர் பவனி நடக்கிறது. இது பேராலயத்தின் 441-வது ஆண்டு பெருவிழாவாகும். இவ்விழா வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 5 மணிக்கு முதலாவது திருப்பலியும், 5.45 மணிக்கு 2-வது திருப்பலியும் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. பின்னர் 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்படுகிறது. பகல் 12 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

        விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது. மேலும், தினமும் இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், உப்பு தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றது. இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா என்பதால் விழாவில் தினமும் ஒரு பிஷப் பங்கேற்கின்றனர்.

          தங்கக்தேர் திருவிழாவை முன்னிட்டு 53 அடி உயரம் கொண்ட பாரம்பரிய தங்கத்தேர் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. இதற்காக ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்ட உயர்தர தங்கத்தாள் ஒட்டும் பணியில் 60-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும், பேராலயத்தில் வீற்றிருக்கும் அன்னையின் திருச்சொரூபம் தங்க முலாம் பூசப்பட்டு வருகிறது. திருப்பலிப்பீடம், பின்னணி அலங்கார வேலைகள், உயர் சுவர் வர்ணம் பூசுதல், உட்புற மற்றும் வெளிப்புற அலங்கார வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது. மேலும் பக்தி ஆராதனை பாடல் பயிற்சிகளும் நடந்து வருகின்றன.

          வெளியூர் திருப்பயணிகள் தங்குமிட ஏற்பாடுகள், குடிநீர், சுகாதார வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை பேராலய அதிபர் பங்குதந்தை குமார்ராஜா தலைமையில், உதவி பங்குத்தந்தை சைமன் ஆல்டஸ், பேராலய மேய்ப்பு பணி குழுவினர், பக்தசபையினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.

           மேலும், இந்தாண்டு நடைபெறும் தங்கத்தேர் திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்து தூத்துக்குடிக்கு மக்கள் வருவார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக, தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.