ஆடி மாதம் முழுவதும் பெண்கள் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

ஆடி மாதம் மழை தீவிரமாகும் காலம் என்பதால் நோய் பரவலும் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க வீடுகளில் தினமும் தீபம் ஏற்ற வேண்டும். குறிப்பிட்ட எண்ணெய் மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள். எனவே ஆடி மாதம் முழுவதும் மறக்காமல் தீபம் ஏற்றுங்கள். தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம்.