வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி அபாரமாக விளையாடி செஞ்சுரி அடித்தார். அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் மைதானத்தில் செஞ்சூரி அடித்தார். 34 வயதான வீராட் கோலி 111-வது டெஸ்டில் 29-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அவர் பிராட்மேன் சாதனை சமன் செய்தார். பிராட்மேன் 52 டெஸ்டில் 29 செஞ்சுரி அடித்து இருந்தார். டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் வீராட்கோலி, பிராட்மேனுடன் இணைந்து 16-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச போட்டிகளில் வீராட்கோலி 76-வது சதத்தை தொட்டார். அவர் டெஸ்டில் 29 சதமும், ஒருநாள் போட்டியில் 46 செஞ்சுரியும், 20 ஓவர் போட்டியில் ஒரு சதமும் ஆக 76 சதத்தை எடுத்து உள்ளார்.தெண்டுல்கர் 100 சதத்துடன் (டெஸ்ட் 51+ ஒருநாள் போட்டி 49) முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இருக்கும் வீராட் கோலி அவரை தொடுவதற்கு இன்னும் 24 செஞ்சூரிகள் தேவை. 500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த வீராட்கோலி கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.”மற்றொரு நாள், மற்றொரு சதத்தை வீராட்கோலி எடுத்துள்ளார். அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது” என்றார்.