கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள கூகையூர் ரோட்டில் அஞ்சலி தேநீர் கடையினை கணேசன் என்பவர் எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலையில் கணேசன் தனது வியாபார நோக்கத்திற்காக கடை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலிலிருந்து சின்னசேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏ.டி ஆறுமுகம் நடத்தி வரும் ஸ்ரீ ராகவேந்திரா பைனான்ஸில் பணம் வாங்கி தொடர்ந்து கட்டி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் பணம் எடுத்தவர்கள் தினமும் மாலை 5 மணிக்குள் கட்டவில்லை என்றால் அவர்களை அதன் உரிமையாளர் ஆறுமுகம் என்பவர் அடித்து உட்கார வைப்பது இவருடைய வழக்கமான செயலாக இருக்கும்.
இதனிடையில் வேறு யாராவது அந்த பைனான்ஸில் பணம் கேட்டு செல்லும் பொழுது ஜாமீன் தாரர் யாரேனும் கூட்டி வாருங்கள் என்று கூறாமல், அஞ்சலி ஸ்வீட் ஸ்டால் கணேசனை தெரியுமா அவர் ஜாமீன் கொடுத்தால் உங்களுக்கு நான் பணம் தருகிறேன். இதை நான் சொல்வதாக நீங்கள் சொல்லக்கூடாது என்று கூறி சிலருக்கு கணேசனை ஜாமீன் கூற சொல்லியுள்ளார். கணேசனும் தனக்கு தெரிந்தவர்களுக்கு பணம் எடுத்துக் கொடுத்தால் கட்டிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பணம் எடுத்துக் கொடுத்துள்ளார். பணம் எடுப்பவர்கள் அந்த நிறுவனத்தில் அவர்களுடைய காசோலை அல்லது பாண்டு எழுதிக் கொடுத்து தான் வாங்கி செல்வார்கள். அதில் சிலர் பணம் கட்டாமல் வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் பணத்தை கட்டாமல் சென்றவர்களிடம் முறைப்படி அவர்களிடம் பணத்தை திரும்ப பெறாத நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.டி ஆறுமுகம் கணேசனை நீ தான் கட்ட வேண்டும் என்று அடித்து மிரட்டி வட்டியோடு சேர்த்து ரூபாய் பத்து லட்சத்திற்கு மிகாமல் வாங்கியுள்ளார். ஜாமீன் போட்டதற்காக அனைவரது பணத்தையும் கணேசனையே கட்ட வேண்டும் என்று அடித்து துன்புறுத்தி கட்ட வைத்துள்ளார்.
இதனிடையே தற்பொழுது வியாபாரம் சற்று நலிவடைந்து உள்ள நிலையில் கணேசன் கட்ட வேண்டிய தினக்கந்து தொகை கட்ட முடியாமல் போனதால் தனது குழந்தையின் தோடு, மனைவியின் தாலி, கடையில் உள்ள சிலிண்டர் என எல்லாவற்றையும் விற்று பணம் கட்டியுள்ளார். தொடர்ந்து கட்ட முடியாமல் போகவே என்னுடைய தினக்கந்து கணக்கை முடித்து, புதிய கணக்கை புதுப்பித்து மாத மாதம் கட்டும் கந்து வழங்குமாறு கேட்டுள்ளார். இதற்கு அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.டி ஆறுமுகம் தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் உன்னை கொன்று விடுவேன் இந்த ஊரில் யாரிடம் வேண்டுமானாலும் போய் சொல் என்னை ஒன்றும் செய்ய முடியாது. போலீசில் சொன்னால் கூட என்னை எதுவும் செய்ய முடியாது என்று கூறி அடிக்க வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கணேசன் தற்கொலை செய்து கொள்ள முற்படவே, கைக்குழந்தையிடம் தவிக்கும் அவரது மனைவி என்ன காரணத்திற்காக இது போன்ற செயலை செய்கிறீர்கள் என்று அழுதுகொண்டு கேட்கும் பொழுது தான் அவரது கணவர், நான் ஏ.டி ஆறுமுகம் அவர்களிடம் எனது நண்பர்களுக்கு பணம் வாங்கி கொடுத்தேன். அவர்கள் கட்ட தவறியதனால் என்னை அடித்து கட்ட சொன்னார். நான் அங்கும் இங்கும் வாங்கி கட்டி விட்டேன். ஆனால் நான் எடுத்த பணத்தை தற்போது இருக்கும் சூழ்நிலையில் கட்ட முடியவில்லை என்று கூறும் போது என்னை அசிங்கமாக திட்டியும், கொன்று விடுவேன் என மிரட்டியும் அனுப்பிவிட்டார். ஆகையால் தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று கூறியவுடன், அவரது மனைவி அவரை கூட்டிக்கொண்டு சின்னசேலம் காவல்நிலத்தில் புகார் மனுவினை அளித்துள்ளார். சின்னசேலம் காவல் நிலையத்தில் நான்கு, நாட்கள் ஆன பின்பும் முறையான விசாரணை மேற் கொள்ளவில்லை என்று கூறி, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் .மோகன்ராஜ்டம் மனு கொடுக்க வந்தனர்.