உத்திரகோசமங்கை திருத்தலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு வேண்டி மரகத சிலை போன்று ஒரு மாதிரி ஐம்பொன் நடராஜர் சிலையை மிகவும் அழகாக வடிவமைத்து அமைத்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக பல முஸ்லிம் மன்னர்கள், அண்டை நாட்டு மன்னர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், வெள்ளைக்காரர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்டோர் கொள்ளையடிக்க முயற்சித்தும், மரகத சிலையை எடுக்க முடியவில்லை. நெருங்கவும் முடியவில்லை. 1970-ம் ஆண்டு ஐம்பது பேர்கள் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று உத்திரகோசமங்கை கோவிலின் மேற்குப்புற வாசல் வழியாக வந்து மரகத நடராஜர் சன்னதி பூட்டை உடைத்து, உடைக்க முடியாமல் வெல்டிங் மிஷின் வைத்தபோது வெல்டிங் வைத்தவனுடைய இடது கை பூட்டாக மாறியதால் தன் கையை வெல்டிங் வைத்து எடுக்கவும், கை இரண்டு துண்டாக விழுந்தவுடன் உணர்வு வந்தது.
உடனே கொள்ளை கும்பல் பயந்து அருகில் இருந்த ஐம்பொன் நடராஜர் சிலையை எடுத்தக் கொண்டு காரில் தப்பித்து ஒருகல் தொலைவில் போகும்போது கொள்ளையர்களுக்கு கண் தெரியாமல் போய் விட்டது. உடனே ரோட்டுக்கு அருகிலுள்ள கண்ணாங்குடி கிராமத்துக்குச் சொந்தமான தண்ணீர் உள்ள குளத்தில் சிலையை போட்டு விட்டனர். அதன் பிறகே கொள்ளையர்களுக்கு கண் தெரிந்தது. உடனே தப்பி விட்டார்கள். நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்ட விபரம் மக்களுக்கு காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் சிலையைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். கண்ணாங்குடியை சேர்ந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுவனால் கண்ணுக்குத் தென்பட்டது சிலை. குளத்தின் தண்ணீருக்கு மேல் ஆகாயத்தில் நின்றது சிலை. இந்த சிலையை கண்ட மக்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார்கள். பின்பு சிலை ராமநாதபுரம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
மாலிக்காபூரிடம் இருந்து தப்பிய சிலை தென் இந்தியாவுக்கு படையெடுத்து வந்து இந்து கோவில்களை சூறையாடிய மாலிக்காபூர் ஒற்றர்கள் மூலம் உத்தரகோசமங்கை நடராஜர் கோவிலில் மரகதம் இருப்பதை அறிந்து கொண்டான். உடனே உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள மரகத கல் நடராஜர் சிலையை கொள்ளையடிப்பதற்கு வேண்டி பெரும் படைகளுடன் சென்றான். உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள நடராஜர் சிலை விலை மதிக்க முடியாத 7 அடி உயரம் கொண்ட மரகத சிலையாகும். இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது. மாலிக்காப்பூர் உத்திரகோசமங்கை கோவிலை நெருங்கும்போது தான் வைத்திருந்த கோவில் வரைபடத்தை தொலைத்து விட்டார். இதனால் அவனும் அவன் படையினரும் உத்திரகோசமங்கைக்கு செல்வதற்கு பதில் ராமநாதபுரத்துக்கு சென்று விட்டனர். ஈசனே அவர்களை திசை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
மாலிக்காபூர் ராமேஸ்வரம் கோவிலில் கொள்ளையடிக்க பொருள்கள் இல்லாமல் கருங்கல்லை எடுத்துச் சென்றார். இந்தியா வரலாற்றில் அலாவுதீன் கில்சிங்படை தளபதி மாலிக்காப்பூர்தான் உத்திரகோச மங்கை வழியாக ராமேஸ்வரம் வரை கொள்ளை அடித்தாக வரலாறு உள்ளது. ஆனால் அவன் கையில் பச்சை கல் நடராஜர் சிலை சிக்காமல் போனது ஈசன் அருளால் நடந்ததாகவே பக்தர்கள் இன்றும் நம்புகிறார்கள். தாயுமானவர் தாயுமானவர் இறுதியாக ராமநாதபுரம் வந்து உத்திரகோசமங்கை திருத்தலத்திற்குச் சென்று சிவனைப் பற்றி மனமுருகப் பாடல்களை பாடினார். இந்தப் பகுதியில் 5 வருடங்களாக மழை பெய்யாமல் பஞ்சம் நிலவியது.
ஆடு மாடுகள் தண்ணீர் இல்லாமல் செத்து மடிந்தது. மக்கள் கடும் பஞ்சத்தால் பிழைப்புக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டார்கள். தாயுமான சுவாமிகள் ஈசன், ஈஸ்வரியின் பாதத்தை கெட்டியாக அணைத்தபடி மனமுருக பாடல்களை பாடினார். வான்மழை விடாது பெய்யத் தொடங்கியது. அந்த வான்மழையிலும் இறைவனின் அருள் மழையிலும், அன்று ஒரே நாளில் பேய் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் எல்லாம் நிரம்பி விட்டது. மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். விவசாயம் விளைந்தது. மக்கள் பசியின்றி வாழ்ந்தார்கள்.