இயற்கை வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் பாளையங்கோட்டை முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை கிராமத்தில் உள்ள பனங்காட்டில் பனை தேசியத் திருவிழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளருமான ரூபி ஆர்.மனோகரன், பால பிரஜாபதி அடிகளார் தொடங்கி வைத்தனர். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: அந்நிய நாட்டு மதுபானங்களை இருக்கும்போது, கலப்படமில்லாத உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் இயற்கை பானமான “கள்” ஏன்? இருக்கக் கூடாது என்ற கொள்கையை உடையவர்கள் நாங்கள். பனை ஏறும் மக்கள் அனைவரும் தியாகிகள்; 30, 40 அடிக்கு உயரத்திற்கு பனை ஏறும்போது, அவர்களுடைய உடலில் பல காயங்கள் ஏற்படுகின்றன. மேலும் பனை ஏறும் தொழில் மிகுந்த ஆபத்தை தரக்கூடியது. எனவே பனைத் தொழிலாளர்களை முழுமையாக காப்பது அரசின் கடமையாகும்.

    பொது நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு குளிர்பானங்களைத் தவிர்த்து இளநீர், பதநீர் போன்ற இயற்கை பானங்களையும், கருப்பட்டி காபி, சுக்கு காபி போன்றவைகளையும் பயன்படுத்த வேண்டும். மேலும் அன்பளிப்பு பொருட்களை கொடுப்பவர்கள் பனை பொருட்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொடுக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு, நெல்லை நாடார் உறவின்முறை தலைவர் அசோகன், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் ஜெ.முத்து ரமேஷ், தென்மாவட்ட நாடார் கூட்டமைப்பின் தலைவர் அர்ச்சுதன் நாடார், காங்கிரஸ் பிரமுகர் வக்கீல் டி.காமராஜ், மூத்த வழக்கறிஞர் பாலகணேசன், காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர்கள் நளன், கனகராஜ், கணேசன், மாவட்டச் செயலாளர் ஓமநல்லூர் கோயில்பிச்சை, காங்கிரஸ் நிர்வாகி எம்.ஏ.சி. சேவியர், பாஜக மாவட்டத் தலைவர் தயாசங்கர், பாஜக பிரமுகர் ரூபிநாத், தேசிய மக்கள் சக்தி கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் ஆழ்வாநேரி எஸ்.பாக்கியமுத்து, அதிமுக அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் கே.ஜே.சி. ஜெரால்டு, டாப் டி.வி ராஜா, தோகை. வாழ்வரசி பாண்டியன், செ.குயிலி நாச்சியார், காரைகுளம் பொதுநல சேவா சங்க ஆலோசகர்கள் சேரன் ஜே.அருள் நாடார், பொன்னுத்துரை ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.