இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ந் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யாமல் இருப்பதே எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு நல்லது என முன்னாள் தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் மக்காயா நிடினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- ஒரு பவுலராக விராட் கோலியை பற்றி உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில் அவரை திட்டி விடாதீர்கள். பொதுவாகவே எந்த எதிரணி வீரராவது நம்மை சீண்ட மாட்டார்களா அதனால் நாம் வெறித்தனமாக செயல்பட மாட்டோமா என்று அவர் பசியுடன் காத்திருப்பார்.
ஏனெனில் எதிரணியினர் தம்மை சீண்டாமல் இருந்தால் அது தான் அவருக்கு கடுப்பாக இருக்கும். எனவே அவரை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள். அப்படி செய்தால் அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவிப்பீர்கள். மாறாக ஸ்லெட்ஜிங் செய்யாமல் விட்டால் அவரே அலுப்பு தட்டி தவறு செய்வார். குறிப்பாக தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு நான் மீண்டும் சொல்கிறேன் அவரை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் ஸ்லெட்ஜிங் செய்யும் போது அவர் இன்னும் உத்வேகமடைந்து அபாரமாக செயல்படுவார். எனவே அவருக்கு எதிராக அமைதியாக இருங்கள். மற்ற பேட்ஸ்மேன்களை வம்பிழுப்பது போல அவரிடம் நீங்கள் எதையும் செய்யாதீர்கள். மாறாக அமைதியாக இருந்து அவருக்கு அலுப்பு தட்டுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துங்கள். அதுவே அவரை நீங்கள் அவுட் செய்வதற்கான சிறந்த வழியாகும் இவ்வாறு அவர் கூறினார்.