உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் ஆக.25 ல் தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியரின் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு அறவழி போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கைது நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது
காவல் துறை கைது நடவடிக்கைகளை கண்டித்தும், வட்டாட்சியர் மனோஜ் முனியன் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் வருகை பதிவேட்டில் இன்று கையொப்பமிட்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளிட்ட அனைத்து பணிகளை 100% புறக்கணிப்பு செய்து அனைத்து வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் செல்லப்பா, துணை தலைவர் பரமசிவம்,
இணை செயலர்கள் காசிநாதன், கோபி கிருஷ்ணன், சரவணன், வட்டக்கிளை தலைவர் சிவக்குமார், செயலர் முருகன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க இணை செயலரும், கருவூல கணக்கு அலுவலர் சங்க மாவட்ட செயலர் ஜெனிஸ்டர் ஆதரித்து பேசினார். மனோஜ் முனியன் பணி நீக்க உத்தரவை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாவட்ட தலைவர் பழனிக்குமார் கூறினார். காத்திருப்பு போராட்ட எதிரொலியால் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, ஆர் எஸ் மங்கலம், ராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடின