ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு 75 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் ஒலா நிறுவனம் S1 ஏர், S1 X மற்றும் S1 ப்ரோ போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கான முன்பதிவு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தான் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முன்பதிவு குறித்து ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது. எனினும், எந்த மாடலுக்கு எத்தனை யூனிட்கள் முன்பதிவு கிடைத்தன என்பது பற்றி ஒலா சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
ஒலா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் குறைந்த விலை மாடலாக ஒலா S1 X இருக்கிறது. இந்த மாடல் – S1 X+, S1 X 2கிலோவாட் ஹவர் மற்றும் S1 X 3கிலோவாட் ஹவர் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் அதிக விலை கொண்ட மாடல் ஒலா S1 ப்ரோ. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் ரைடிங் ரேன்ஜ் உள்ளிட்டவை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒலா S1 X மற்றும் S1 ப்ரோ மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் S1 ஏர் மாடல் கணிசமான அம்சங்களை கொண்டிருக்கிறது.