வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளின் மறு சீரமைப்பு பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில்..

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான 1038 வாக்குச்சாவடிகள் அடங்கிய வாக்குச்சாவடி பட்டியலை கடந்த 24 ஆம் தேதி வெளியிட்டார்.

அப்போது அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் ஒரு வார கால இடைவெளியில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் 1500 க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறியுங்கள். வாக்குச்சாவடி கட்டிடங்களின் தரம் குறித்தும் வாக்காளர்கள் எளிதாக சென்று வாக்களிக்கும் விதமாக ஏற்பாடு செய்ய முனைப்போடு இருந்து அதற்கான செயல்பாடுகளை செய்ய முழுமையான தகவலை கொடுங்கள் என்றும் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று இறுதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வழங்க மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது சடையனுர் வெங்கடேஸ்வரா நகர் திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றங்கள் வேண்டும் என்று சமூக ஆர்வலர் பெருமாள் மற்றும் தேமுதிக சார்பாக  மாவட்ட செயலாளர் மதன் துணை செயலாளர் சி எஸ் சரவணன் கோரிக்கை வைத்தனர். 

இதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று திருத்தப்பட்ட இறுதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.