அரியலூர் மாவட்டம் உடையார்பானையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(58). இவர் ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு பள்ளிக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியபோது, சோழங்குறிச்சி அருகே மர்மநபரால் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி உஷாராணி(51) அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட உடையார்பாளையம் போலீஸார், ஆசிரியரை கொலை செய்த ஜெயங்கொண்டம் காமராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேசன்(24) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிந்து நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பளித்தார். அப்போது, ஆசிரியர் கொலை வழக்கில் குற்றவாளியான வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும்,ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து வெங்கடேசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.