ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்ட மன்ற தொகுதி கோபி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் அம்மா பாளையம், மேவாணி, கணேசன் புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் ஆரம்ப பள்ளி படிப்பிற்கு பிறகு மேல் படிப்பிற்கு பள்ளிக்கு செல்ல சுமார் 60 குழந்தைகளுக்கு மேல் பரிசல் மூலம் சென்று வர வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
பருவ கால மழையினால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு நீர் வடியும் வரை பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அடிப்படை வாழ்வாதாரமான கல்வி, மருத்துவம்,விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற தேவைகளுக்கு அத்தாணி பகுதிக்கு செல்ல பவானி ஆறு குறுக்கே இருப்பதால் நாள்தோறும் ஆற்றை பரிசல் மூலம் கடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
அங்குள்ள பொதுமக்கள் திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டால் கூட அவசர சிகிச்சைக்காக சுமார் 7கிலோமீட்டர் வரை சுற்றி செல்ல கூடிய நிலையில் உள்ளனர்.
அதே போல் தங்கள் வருமானத்திற்காகவும், விவசாயம் மற்றும் பிற தொழில் புரிபவர்களும் நாள்தோறும் பரிசல் பயணத்தையே நம்பியே உள்ளனர்.
இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்வோர் மற்றும் விவசாயிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் சென்று பரிசல் பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்திபொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாசலத்தை கேட்ட போது,
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஈரோடு வருகை புரிந்த போது, அம்மா பாளையம் பொதுமக்கள் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட மனுக்களை கொடுத்துள்ளனர். அம்மாபாளையம் பொது மக்களின் கோரிக்கையை நான் இரண்டு முறை சட்ட மன்ற கூட்ட தொடரில் பேசியுள்ளேன்.
மேலும் வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
இதன் அடிப்படையில் அரசு ஆய்வுகளை மேற்கொண்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு உடனடியாக ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர் என கூறினார்.
ஆய்வின் போது, வடக்கு ஒன்றிய செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன், ஒன்றிய துணை செயலாளர் நிர்மலா தேவி, ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ராஜசேகர்,மாவட்ட தகவல் தொழிலநுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.