தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி எம்பி மேற்கொண்ட இந்தியா ஒற்றுமை நடைபயணத்தின் ஒராண்டு நிறைவை கொண்டாடும் வகையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நடை பயணத்தை குமரியில் துவங்கி காஷ்மீர் வரை சென்று முடிவடைந்தது.
இந்த இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் ஒராண்டு நிறைவை இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் நடை பயணம் மேற் கொண்டனர்.
அதே போல தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா ஒற்றுமை நடைபயணம் தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கட்சியின் மாவட்ட தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் துவங்கியது.
இந்த நடைபயணத்தில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தென்காசியில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய இந்தியா ஒற்றுமை நடை பயணமானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சிந்தாமணி வரை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில்,
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொடி குறிச்சி முத்தையா, மாவட்ட துணை தலைவர் நயினாகரம் சிவராமகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ், சித்திக், வட்டாரத் தலைவர் பெருமாள், ஏபிடி மகேந்திரன் தென்காசி நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், நகர பொருளாளர் ஈஸ்வரன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகர், புளியங்குடி நகர தலைவர் பால்ராஜ், எஸ் கே டி ஜெயபால், மகளிர் அணி தலைவி சேர்மகனி, தேவி முத்துமாரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.