தென்காசி நகராட்சி 23-வது வார்டு அண்ணா நகர் பொதுமக்கள் அடிப்படை வசதிகளை கேட்டு அண்ணா பிறந்த நாளில் நகராட்சியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தின் தலைநகர் தென்காசி நகராட்சி பகுதியான இங்கு 33 வார்டுகள் உள்ளது. மாவட்டத்தின் தலைநகராக இருந்த போதிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வருகிறது. இந்நிலையில் 23-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான அண்ணா நகர், முப்புடாதி அம்மன் கோவில் தெரு, புலிக்குட்டி விநாயகர் கோவில் தெரு, ஜமால் நகர் ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, பொது சுகாதாரம், சாலை வசதி, கழிவு நீர் ஓடை வசதி, தெரு விளக்கு போன்ற வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், 23 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுனிதாமுத்து தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அடிப்படை வசதி கேட்டு நகர்மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு மாதத்திற்குள் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் சாலை வசதிகள் அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். அண்ணா பிறந்தநாள் அன்று அவர் பெயர் தாங்கிய நகருக்கு குடிநீர் வசதி கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.