மனஅழுத்தம் மற்றும் மாசு உட்பட தொடர்ந்து வரும் உடல்நல அச்சுறுத்தல்களே இதயநோய் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருப்பதற்கான காரணமாக கருதப்படுகிறது
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான நபர்களின் உயிரிழப்பிற்கு இதயநாள நோய்களே காரணமாக இருக்கின்றன. கடந்த தசாப்தத்தோடு ஒப்பிடுகையில், இந்த தசாப்தத்தில் உயிரிழப்புகள் 20% அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது. எனினும், தீவிர உடற்பயிற்சி, அதிக புரதம் உள்ள உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது, நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அலட்சியம் செய்வது, ஆகியவற்றால் தான் இதய நோய்களில் 80% ஏற்படுகின்றன என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 – ம் தேதியன்று அனுசரிக்கப்படும் உலக இதய தின நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் ஆரோக்கியமான நபர்கள், இளவயதினர் உட்பட ஒவ்வொருவரும் உரிய கால அளவுகளில் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம் என வலியுறுத்தினர். இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு அளவு போன்ற காரணிகளோடு தொடர்புடைய ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும் அம்சங்களை அறிந்துகொள்வது முக்கியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். வாழ்க்கைமுறை, உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு உடல்நலப் பரிசோதனையும் அதன் முடிவுகள் குறித்த அறிவும் அத்தியாவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இம்மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன் மற்றும் முதுநிலை இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். எம். ராஜன் ஆகியோரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். உலக இதய தின அனுசரிப்பையொட்டி மருத்துவமனை வளாகம் முழுவதும், இதய ஆரோக்கிய விழிப்புணர்வுடன் தொடர்புடைய நிறமான சிவப்பு நிற விளக்குகளால் ஒளிர்ந்தன. இம்மாதம் முழுவதிலும் சிறப்பு ஸ்க்ரீனிங் மற்றும் நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் மருத்துவர்களுடன் கலந்தாலோசனை சேவைகள் என பல்வேறு சேவைகளையும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை வழங்கி வருகிறது. இம்மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ நிபுணர்களின் ஒரு பிரத்யேக குழு, மதுரை மாநகரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் சென்று இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு சிறப்புரையாற்றி ஆலோசனை குறிப்புகளை வழங்கி வருகின்றனர் என்றனர்