ஈரோடு பழையபாளையத்தில் உள்ள சத்தி துரைசாமி திருமண மண்டபத்தில் சக்தி தேவி அறக்கட்டளையின் சார்பில் ஈரோடு மாநகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவும், அவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாமும் நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். சக்தி தேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் டாக்டர் துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி, ஈரோடு மாவட்ட தொழிலாளர் இணை ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் முனைவர் வெ.இறையன்பு பங்கேற்று, 150 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் 2 செட் சீருடை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் வெ.இறையன்பு பேசுகையில் கூறியதாவது:
ஒரு மாநிலத்தின் முகமாக இருப்பது ஆட்டோ ஓட்டுநர்கள் தான். ஒருவர் தொடர் வண்டி(ரயில்) நிலையத்திலோ, விமான நிலையத்திலோ இறங்கினால், அவர்கள் முதலில் சந்திப்பது ஆட்டோ ஓட்டுநர்களை தான். எனவே, நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்களோ, அதை வைத்து தான் அந்த மாநிலத்தின் பிம்பம் அவர்களுக்கு ஏற்படும். இதன்பேரில், சென்னையில் சுற்றுலா நட்பு வாகனம் திட்டத்தை துவக்கினோம். இதேபோல், பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுலா நட்பு வாகனங்கள் பெருகியது. இந்த வாகனங்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருந்தது. அவர்களை நலவாரியத்தில் இணைக்க முயற்சி செய்து, இணைத்தோம்.அந்த அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலா நட்பு வாகனங்கள் துவக்கி, நலவாரியத்தில் இணைக்க கோரி வலியுறுத்தினேன். இதன்பேரில், ஒரு வாரத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர் துறையின் கீழ் 18 நலவாரியங்கள் உள்ளது. நீங்கள் இந்த நலவாரியத்தில் சேர்ந்தால் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு. இந்த உறுப்பினர் அட்டையின் மூலமாக உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உங்களோடு இல்லாமல் உங்களை போல உங்களது நண்பர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து விடுங்கள். நீங்கள் சுத்தமாகவும், தூய்மையாக இருப்பது போல, ஆட்டோவையும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். பயணிகளிடம் அன்பாகவும், மரியாதையாகவும், பயணிகளுக்கு ஒத்தாசையாகவும் இருக்க வேண்டும். நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். சகல நேரமும் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை விட்டுவிடக்கூடாது. குடும்பத்தையும், தொழிலையும் சம தன்மையோடு நடத்தினால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். சேமிக்கும் பழக்கத்தை துவங்குங்கள். தீய பழக்கங்களை கைவிட்டு விடுங்கள். இருந்தால், அதில் இருந்து மீள மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று கைவிட முயற்சி செய்யுங்கள். ஈரோடு மாவட்டத்தில் 100 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி வழங்கி, திறன் பயிற்சி அளிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள், பெண்கள், பெண் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்ல ஏதுவாக இருக்கும். இவ்வாறு வெ.இறையன்பு கூறினார். இந்நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அவர்களது குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.