திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோயை வென்றவர்களின் வெற்றி விழா நிகழ்ச்சி மருத்துவமனையின் வளாகக் கட்டடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி.ரேவதி பாலன் தலைமை தாங்கினார். மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டை வெளிட்டார். மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சி.ரேவதி பாலன், முதல் கையேட்டைப் பெற்றார். தொடர்ந்து புற்றுநோயை வென்றவர்களுக்கு சபாநாயகர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் மு.அப்பாவுக்கு கூறியதாவது: இந்தியாவில் 704 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தை விட மூன்று மடங்கு மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 68 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன.

    ஆனால் தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 38 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம் ‘திராவிட மாடல்” ஆட்சியாகும். திராவிட மாடல் ஆட்சியில் கல்வி வளர்ச்சி சமூகப் புரட்சி ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் எடுத்த முயற்சியால் மருத்துவத்துறை மற்றும் பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் நல்ல வளர்ச்சி பெற்று உள்ளது என்றார், சபாநாயகர் மு.அப்பாவு. முன்னதாக புற்றுநோய்த்துறைத் தலைவர் டாக்டர் சுந்தரம் வரவேற்றார். நிகழ்ச்சியில் அவசர சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் முகமது ரபீக், டாக்டர் சரவணன், டாக்டர் தெய்வநாயகம், டாக்டர் ஆறுமுகம், டாக்டர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.