முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பாக முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி த. ராஜகுமார் தலைமை தாங்கினார், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை க.ஜோசப் விக்டோரியா ராணி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி த. ராஜகுமார் தனது தலைமை உரையில் மாணவர்கள் நல்ல காரியம் செய்ய தயக்கம் காட்ட கூடாது நாசாவின் விண்வெளிப் பயணங்களில் வீரர்களிடம் ஒரு விதி முக்கியமாக சொல்லப்படும். ஏதேனும் புதிய விஷயத்தை முயற்சிக்கிறோம் என்றால் அதை குழுவில் இளையவர் தான் செய்ய வேண்டும். அதன்படி அன்று அப்பல்லோ களத்தில் பயணித்தவர்களில் எட்வின் ஆல்ட்ரின் தான் இளையவர். அவர் முதலில் இறங்கவேண்டும் என்றுதான் நாசா தனது திட்டத்தில் குறிப்பிட்டு இருந்தது. நிலவில் விண்கலம் இறங்கியதும் எட்வினைத்தான் நாசா அதிகாரிகளும் நிலவில் இறங்கச் சொன்னார்கள். ஆனால் எட்வின் நிலவில் இறங்குவதற்கான கட்டளை நாசாவில் இருந்து பிறப்பிக்கப்பட்டதும், அவர் அதை ஏற்க மறுத்து தயக்கம் காட்டியதால் இதையடுத்து நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்குவதற்கான உத்தரவை நாசா பிறப்பிக்க, அந்த வரலாற்று சம்பவத்தை நிகழ்த்தினார் ஆம்ஸ்ட்ராங். வரலாறு என்னவோ எப்பொழுது முதலில் வந்தவர்களைத்தான் நினைவில் வைத்திருக்கிறது. எவ்வளவு நூலிழை வித்தியாசம் என்றாலும் இரண்டாம் இடம் இரண்டாம் இடம்தான்.. அந்த சிறிய நூலிழையில் தான் எட்வின் ஆல்ட்ரின் வரலாறும் கைவிட்டு போனது. ஆம்ஸ்ட்ராங்கின் வரலாறும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. ஆகவே மாணவர்கள் ஆகிய நீங்கள் ஆசிரியர்கள் கூறும் நல்ல விசயங்களை தயக்கம் இல்லாமல் செய்ய வேண்டும். மேலும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் குறித்த பிரச்சனைகளை தயக்கம் இன்றி உங்கள் பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் தெரிவிக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏனெனில் இப்பொழுது உள்ள ஆசிரியர்கள் உங்களை அன்புடன் அரவணைத்து ஆடி பாடி பாடம் கற்பிக்கிறார்கள், உங்களை நல்வழிப்படுத்துகிறார்கள். குழந்தைகள் நீங்கள் விடுதலை போராட்ட வீரர்களை பற்றி படிக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின விழா வாழ்த்துக்கள். என்று பேசினார். இவ்விழாவில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் ஓவியப் போட்டி, பேச்சு போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நீதிபதி அவர்கள் பரிசுகள் வழங்கினார்.