அரியலூர் ஏ கே எம்  ஐ ஏ எஸ் அகடமி வளாகத்தில், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு நிர்வாகக் குழு கூட்டம், அதன் துணைத் தலைவர் புலவர் சி.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் கே.வி. புகழேந்தி வரவேற்று பேசினார். அமைப்புச் செயலாளர் அ. நல்லப்பன் ஆசிரியர் உள்ளிட்டோர் பேசிய இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை, வருகிற 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, அரியலூர் அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்துவது. தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆறாவது புத்தகத் திருவிழா மற்றும்  வரவு,செலவு இனங்கள் தொடர்பான அறிக்கையை, மேற்கண்ட பொதுக்குழுவில் தாக்கல் செய்வது.
தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் செயலாளர் க.ராமசாமிக்கு, செம்மொழி கலைஞர் விருது வழங்கி சிறப்பித்த தமிழக  அரசுக்கும், முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது.
தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் செயலாளராக உள்ள, பேராசிரியர் க.ராமசாமியின் உடல் நலம் மற்றும் குடும்ப நலன் கருதி, இப்பதவியிலிருந்து விலகுவதாக அவர் கொடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, அவரால் தொடங்கப்பட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்புக்கு,  நிறுவனர் என்கிற பொறுப்பையும், நிர்வாக ஆலோசகர் என்கிற பொறுப்பையும் அவருக்கு வழங்கிட நிர்வாக குழு தீர்மானிக்கிறது.
மேலும் பேராசிரியர் க.ராமசாமி விலகலை தொடர்ந்து, அவர் பணியாற்றிய செயலாளர் பதவியை, துணைத் தலைவர் டாக்டர் கதிர்  கணேசனுக்கு வழங்கிட, பொதுக்குழுவில் ஒப்புதலை பெறுவது உள்பட, ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க நிர்வாகிகள் டாக்டர் கதிர் கணேசன், தமிழ் களம் இளவரசன், உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தின் முடிவில் ஜோதி ராமலிங்கம் நன்றி கூறினார்.