அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம், தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் நடைபெற்ற 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,
70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா 14.11.2023 முதல் 20.11.2023 வரை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா இளைஞர், பெண்கள், நலிந்த பிரிவினர் மற்றும் சுகாதாரத்திற்கான கூட்டுறவு அமைப்புகள் எனும் மையக்கருத்துடன் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் உறுதியான மற்றும் ஆற்றல் வாய்ந்த கருவியாக கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இன்றைய கூட்டுறவு வார விழாவில் பயிர்கடன், கால்நடை பராமரிப்புகடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன், மாற்றுத்திறனாளிகடன், டாப்செட்கோ கடன், மீன்வளர்ப்பு பராமரிப்புக் கடன், மத்தியகாலக் கடன், வீட்டு அடமானக்கடன், பணியாளர் கூட்டுறவு சங்க மத்திய கால கடன், நீர்பாசன கடன், வீட்டு வசதி கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் என மொத்தம் 4,482 பயனாளிகளுக்கு ரூ.33.41 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வருகிறார்கள். விவசாயிகளின் மீதுள்ள அன்பையும், அக்கறையும் வெளிப்படுத்தும் விதமாக விவசாய பயிர்கடன் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள், விவசாய கடன் தள்ளுபடி ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மிகச்சிறப்பான, மகளிர் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 1 இலட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேலான மகளிர் மாதந்தோறும் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் காரணமாக கூட்டுறவுத் துறைகளின் மத்திய வங்கிகளில் சுமார் 20,996 புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அந்த வங்கி கணக்குகளின் மூலம் உரிமைத் தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயல்பாடுகளால் மகளிர் எளிதாக மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடனுதவி பெறமுடியும்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசினார் . இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ம.தீபாசங்கரி, அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஃ பொது மேலாளர் திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் முத்துமாரி, மண்டல மேலாளர் டாப்செட் திருச்சி புண்ணியமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், பொதுமேலாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முருகன், மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் ராஜா, துணைப் பதிவாளர் (பொ.வி.தி) அறப்பளி, வருவாய் கோட்டாட்சியர் (அரியலூர்) ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா இளையராஜன் பல்வேறு துறைகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்களின் பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.