அத்திவரதர் புகழ்பெற்றதும், ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதும்,வரலாற்று சிறப்பும் மிக்கது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில். இத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ தாத தேசிகன் சாற்றுமுறை உற்சவத்தன்று ஒரு நாள் மட்டும் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாளும் பெருந்தேவி தாயாரும் ரத்ன அங்கி அணிந்து ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார்கள். செவ்வாய்க்கிழமை தாத தேசிகன் சாற்று முறை உற்சவ நாளை முன்னிட்டு காலையில் பெருமாளும் தாயாரும் ரத்ன அங்கி சேவை அணிந்து பக்தர்களுக்கு அருள் அளித்தனர். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.பின்னர் தேசிகனுக்கு மாலை மரியாதைகள் அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.மதியம் உற்சவர் வரதராஜ பெருமாளுக்கும்,பெருந்தேவித் தாயாருக்கும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் பெருமாளும் தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளனர்.ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் நடைபெறும் பெருமாளின் ரத்ன அங்கி சேவைக் காட்சியை காண வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.