திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பங்களாப்பாநகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது தாயுடன் மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் பகுதியில் அம்பை சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் புதிய வங்கி கணக்கு தொடங்க கடந்த 19ஆம் தேதி (நவம்பர்) வங்கிக்கு தனது தாயுடன் நேரில் சென்று மனு செய்தார்.

     ஆனால் நேற்று 29ஆம் தேதி காலை வரை 10 நாட்களை கடந்த பின்னரும் மேலப்பாளையம் கனரா வங்கியில் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு புதிய கணக்கு தொடங்கி “பாஸ் புத்தகம்” வழங்கப்படவில்லை. கடந்த நான்கு ஐந்து நாட்களாக குறிப்பிட்ட வாடிக்கையாளரை ‘இன்று வாருங்கள், நாளை வாருங்கள்’ என்று மேலப்பாளையம் கனரா வங்கி ஊழியர்கள் அலைக்கழித்து உள்ளனர். இதுகுறித்து உள்ளாட்சி சாரல் நாளிதழின் நெல்லை மாவட்ட முதன்மைச் செய்தியாளர் வங்கி மேலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வங்கியில் போதிய ஊழியர்கள் இல்லாததினால் காலதாமதம் ஆவதாக கூலாகப் பதில் அளித்தார்”. மேலும் மேலப்பாளையம் கிளை கனரா வங்கியின் வாடிக்கையாளர் சேவை மிகவும் மோசமாக உள்ளதாக பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

     திருநெல்வேலி மாநகரத்தில் மேலப்பாளையம் மிக முக்கியமான நகரம் ஆகும். இங்கு லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள பெரும்பான்மையான மக்கள் ‘பீடி சுற்றும் தொழிலை’ முதன்மையாகச் செய்து வருகின்றனர். கல்வி அறிவில் சற்று பின்தங்கியுள்ள மக்கள் இங்கு அதிகமாக வாழ்கின்றனர். இந்த நிலையில் மேலப்பாளையம் கனரா வங்கி கிளையில் உள்ள வங்கி ஊழியர்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் தொடர்பு கொள்ளும்போது, ‘ஆன்லைன் பரிவர்த்தனை செய்யுங்கள்’ என்று வாடிக்கையாளர்களை அலட்சியப்படுத்துகின்றனர்.

    எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், மேலப்பாளையம் கனரா வங்கியில் கூடுதலாக போதிய ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.