டர்பன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனையை படைத்தது இலங்கை அணி.
டர்னில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டி மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்திருந்தது.முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. எய்டன் மார்க்ரம் 9, டோனி டி ஸோர்ஸி 4, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 16, டேவிட் பெடிங்ஹாம் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். தெம்பா பவுமா 28, கைல் வெரெய்ன் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.2-வது நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து விளையாடியது. கைல் வெரெய்ன் (9) மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காத நிலையில் லகிரு குமரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதைத் தொடர்ந்து மார்கோ யான்சன் 13, ஜெரால்டு கோட்ஸியா 1, கேசவ் மகாராஜ் 24 ரன்களில் நடையை கட்டினர்.
ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சீராக விளையாடி தனது 22-வது அரை சதத்தை கடந்த கேப்டன் தெம்பா பவுமா 117 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் அஷிதா பெர்னாண்டோ பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி வீரராக காகிசோ ரபாடா 15 ரன்களில் வெளியேற தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 49.4 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வியான் முல்டர் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ, லகிரு குமரா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி, மார்கோ யான்சனின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 13.5 ஓவர்களில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பதும் நிஷங்கா (3), தினேஷ் சந்திமால் (0), ஏஞ்சலோ மேத்யூஸ் (1), கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா (7), பிரபாத் ஜெயசூர்யா (0), விஷ்வா பெர்னாண்டோ (0), அஷிதா பெர்னாண்டோ (0) ஆகியோர் மார்கோ யான்சன் பந்தில் நடையை கட்டினர். கமிந்து மெண்டிஸ் (13), குஷால் மெண்டிஸ் (0) ஆகியோர் ஜெரால்டு கோட்ஸியா பந்திலும், திமுத் கருணரத்னே (2), காகிசோ ரபாடா பந்திலும் ஆட்டமிழந்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் 1994-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கைஅ ணி 71 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ யான்சன் 6.5 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 13 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் எதிரணி 50 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் நியூஸிலாந்து 45 ரன்களிலும், ஆஸ்திரேலியா 47 ரன்களும், பாகிஸ்தான் 49 ரன்களிலும் ஆட்டமிழந்து உள்ளது.
டர்பன் டெஸ்ட் போட்டியில் 149 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 39 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது.