![vilaiyattu](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/vilaiyattu-1024x576.jpg)
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் சமீபமாக 1-4 என்று செம உதை வாங்கியது இங்கிலாந்து. நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் என்ற நிலையில் இருந்து கடுமையாகச் சரிந்தது. சுழற்பந்து வீச்சை ஆடத் தெரியவில்லை. ஜடேஜாவிடம் 3 விக்கெட்டுகளைக் கொடுத்தது. கடைசியில் 248 ரன்களை எடுக்க இந்திய அணி இதை ஒரு ஸ்கோராக கூட மதிக்காமல் ஆடி வெற்றி பெற்றது.
எண்டெர்டெயின்மெண்ட் என்ற ஒரு வார்த்தையை அடிக்கடி பிரெண்டன் மெக்கல்லம் பயன்படுத்துகிறார். அதாவது இங்கிலாந்து எந்தெந்த ஊர்களுக்குச் செல்கிறதோ அந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியடையும் விதமாக அதாவது எந்த நாட்டுக்குச் செல்கிறார்களோ அந்த நாட்டை வெற்றி பெறச் செய்து ‘என்டர்டெயின்’ செய்யும் விதமாக இங்கிலாந்து தோற்க வேண்டும் என்று புரிந்து கொண்டாரா மெக்கலாம் என்பது புரியவில்லை.இங்கு வருவதற்கு முன்பாக 2023 உலகக் கோப்பைப் படுதோல்விகளுக்குப் பிறகு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 2023-24 தொடரில் 2-1 என்று தோற்றது. 2024-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்குச் சென்று 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய போது ஆஸ்திரேலியா 3-2 என்று வெற்றி பெற்றது. மீண்டும் மேற்கு இந்தியத் தீவுகள் சென்ற இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்று தோல்வி கண்டது.இப்போது இங்கு வந்து டி20-ல் உதை, முதல் ஒருநாள் போட்டியில் எந்தவித ஃபைட்டும் இல்லாமல் சரணடைந்த தோல்வி. ஏன் ஐசிசி எஃப்.டி.பி-யில் இந்தியா, இங்கிலாந்து தொடர்களுக்கு இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? கொஞ்சம் கூட மேம்படாத இங்கிலாந்து அணியை அழைத்து இந்தியாவில் கிரிக்கெட்டைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.
அதாவது ஒரு அணி வெற்றி பெற ஆட வேண்டும், இது மெக்கல்லமுக்குப் புரியவில்லை, வெற்றிகளை அடைய அடையத்தான் வீரர்களின் தன்னம்பிக்கையும் ஸ்பிரிட்டும் பீறிட்டு எழும். தோற்றுக் கொண்டே இருந்தால் இவர்கள் சொல்லும் ஆஷஸ் தொடரிலும் மண்ணைக் கவ்வச் செய்வார் பாட் கம்மின்ஸ் அண்ட் கோவினர்.
இங்கிலாந்து உள்ளிட்ட பெரிய அணிகள் என்று அழைக்கப்பட்டு சொதப்பும் அணிகளை விட ஆப்கானிஸ்தான் போன்ற பிரமாதமான புது புது உற்சாகமூட்டும் இளம் படையினர் கொண்ட அணியுடன் இந்திய அணி ஆடினால் என்ன கேடு என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
டி20 தொடரிலும் பார்த்தோம், நேற்றும் பார்த்தோம், இங்கிலாந்துக்கு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம், தாக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களை ‘Poor Travelers’ என்று அந்தக் காலம் முதலே விமர்சிப்பார்கள். வெளிநாடுகளில் வந்து சொதப்பி, எந்த ஒரு சவாலும் இல்லாமல் தோற்பது இங்கிலாந்தின் வாடிக்கை.
ஆகவே, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு வாய்ப்பை பிசிசிஐ வழங்க வேண்டும், பிசிசிஐ, இங்கிலாந்து வாரியத்திடம் சொல்லி விட வேண்டும், ‘நீங்கள் மேம்படும் வரையில் 2 போட்டிகள் கொண்ட தொடர் மட்டும் தான் ஆட முடியும்’ என்று இங்கிலாந்து வாரியத்திடம் சொல்லி விடுவது நல்லது.
ஏனெனில், ஒருதலைபட்சமான தொடர்களை தொடர்ச்சியாகப் பார்ப்பது மிகவும் சோர்வூட்டக் கூடியதாக உள்ளது. ஷுப்மன் கில் போன்ற வீரர்கள் எல்லாம் இத்தகைய சூழ்நிலையில்தான் ஃபார்மை மீட்டெடுத்துக் கொண்டு அணியில் நீடிக்க முடிகிறது. ஜடேஜா தேவையா என்ற கேள்வி இருப்பது போக அவரிடம் 3 விக்கெட்டுகளைக் கொடுக்கின்றனர். இப்படியாக இங்கிலாந்துக்கு எதிராக ஆடுவதை வைத்து நாம் பெரிய ஐசிசி தொடர்களுக்கான அணியைத் தேர்வு செய்தால் அது நிச்சயம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். அதே போல் பேட்டிங்கில் அக்சர் படேல் விக்கெட்டைக் கூட சடுதியில் வீழ்த்த முடியாத ஒரு அணியாக உள்ளது இங்கிலாந்து.
ஸ்ரேயஸ் ஐய்யருக்கு ஷார்ட் பிட்ச் பலவீனம் என்று எப்போதோ யாரோ சொன்னதை வைத்து அவருக்கு வீசி நேற்று வாங்கிக் கட்டிக் கொண்டது. ஐயருடைய உண்மையான பலவீனம் கோலியின் பலவீனம் போன்றதே. எந்த ஒரு திட்டமிடலும் இன்றி இங்கிலாந்து ஒவ்வொரு தொடருக்கும் சென்று சரியான உதை வாங்கி வருகிறது. எனவே சிறிய அணிகள் என ஒதுக்கப்படும் அணிகள் நல்ல நிலையில் உள்ளன, குறைந்தது அவர்கள் நல்ல போட்டி திறனுடன் ஆடுவார்கள், சவால் அளிப்பார்கள் எனவே அத்தகைய அணிகளை அழைத்து ஆடுவதுதான் சிறந்தது.