![VILAI](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/VILAI-1-1024x597.jpg)
கட்டாக்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தினார். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ரோஹித் வென்றார்.
இந்தப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரோஹித் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. அது தொடர்பாக இங்கிலாந்து அணியுடனான முதல் ஆட்டத்துக்கு பிறகும் இரண்டாவது ஆட்டத்துக்கு முன்பும் ரோஹித் வசம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.அவரது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்வியும் இதில் கேட்கப்பட்டது. அதை கேட்டு ரோஹித் விரக்தி அடைந்தார். ரோஹித்தின் ஃபார்ம் குறித்து சமூக வலைத்தளத்திலும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் இது மாதிரியான கேள்விகளை நாம் தவிர்க்க முடியாது. களத்தில் நமது செயல்பாடு தான் இதற்கான பதிலாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் சொல்லி இருந்தார். இந்த சூழலில் தான் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதம் கண்டார்.“அணிக்காக ரன் சேர்த்ததில் மகிழ்ச்சி. இந்த தொடரில் இந்தப் போட்டி முக்கியமானது. நான் எப்படி பேட் செய்ய வேண்டுமென்பதை பிரித்து பார்த்தேன். கள சூழலை கருத்தில் கொண்டு விளையாடினேன். கடைசி வரை களத்தில் இருக்க விரும்பினேன். இந்த ஆடுகளம் கருப்பு மண் என்பதால் பந்து ஸ்கிட் ஆகி வரும் என்பது அனைவரும் அறிந்தது. அதற்கு தகுந்தபடி வியூகம் அமைத்தோம். ஃபீல்ட் பிளேஸ்மெண்டில் உள்ள கேப்பினை பயன்படுத்தி ரன் சேர்த்தேன். ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் எனக்கு உதவினர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் ரன் சேர்ப்பது மிகவும் முக்கியம். அதை கடந்த போட்டியிலும், இந்தப் போட்டியிலும் செவ்வனே நாங்கள் செய்திருந்தோம். அதன் மூலம் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் எங்களால் விளையாட முடிகிறது. அணியாக நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ்கள் எனது மைண்ட் செட்டையும் நான் பேட்டிங் செய்யும் முறையையும் மாற்றப் போவதில்லை.” என ஆட்ட நாயகன் விருது வென்ற ரோஹித் தெரிவித்தார்.