திருச்சி
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நேற்று தொடங்கியது – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சத்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும் .இங்கு ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடம் சித்திரை தேரோட்டத்திற்கான கொடி ஏற்றம் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற்ற நிலையில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாரியம்மன் திருவீதி உலா வந்தார்.தேரோட்டம் நேற்று காலை 10.30 மணி அளவில் துவங்கியது – முதல் காலை முதலே திருச்சி, பெரும்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அலகு, அக்னி சட்டி போன்ற நேர்த்திகடனை செலுத்தி வருகின்றனர்.பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுமார் 15 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் – மாவட்ட காவல் துறை சார்பில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.