ஒரு குடம் தண்ணீரை ரூ.5 கொடுத்து வாங்கும் அவலம்:
நடவடிக்கை எடுக்க ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் தரப்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில், கோடைகாலம் காரணமாக திடீர் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவில்பத்து பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இதேபோல், நாங்குநேரி தொகுதியின் பல்வேறு இடங்களிலும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் சிலர் டிராக்டர்களில் சுகாதாரமற்ற குடிநீரை விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களிடம் ஒரு குடம் தண்ணீரை 5 ரூபாய் கொடுத்து பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டும் இதேபோல் வறட்சி நிலை ஏற்பட்டபோது, தனியார் சிலர் வாகனங்கள் மூலம் விற்பனை செய்த சுகாதாரமற்ற குடிநீரால் மஞ்சள் காமாலை நோய் பரவியது. அதுபோன்ற நிலைமை தற்போதும் ஏற்பட்டுவிடக்கூடாது.ஆகவே, மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து, நாங்குநேரி தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதோடு, பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் குடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், சிவபுரம் பகுதியில் தனியார் தோட்டங்களில் இருந்து குடிநீர் பெற்று, அதை டிராக்டர்களில் கொண்டு வந்து தனியார் சார்பில் விற்பனை செய்வதற்கு வனத்துறை அதிகாரிகள் தடை விதிப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறுகிறார்கள்.
பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீரை தனியார் விற்பனை செய்யும்பட்சத்தில் அதைத் தடுத்து நிறுத்தாமல், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க மாவட்ட கலெக்டர் வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.