100 நாள் வேலை வழங்காததை கணடித்து -ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகை.

 ஆரணி அடுத்த பனையூர் ஊராட்சியைச் சேர்ந்த அக்கூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் வேலை முறையாக வேலை வழங்காததை கண்டித்து ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டனர்.

  ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பனையூர் ஊராட்சிக்குட்பட்ட பனையூர், வடக்கமேடு, ஒகையூர், அக்கூர் ஆகிய கிராமங்கள் உள்ளது.

மேலும் அக்கூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில்  புல் வளர்த்தல், மரக்கன்றுகள் நடுதல், நீர்வரத்து கால்வாய் அமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல், அக்கூர் சுடுகாட்டு பகுதியில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சக்கால் புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் 2500 மரக்கன்றுகள் நடப்பட்டு, நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், செடிகளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், அதே கிராமத்தில் உள்ள  பணியாளர்களை கொண்டு இப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த கிராமத்தில் உள்ள வார்டு உறுப்பினர் பூபாலன் என்பவரின் உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலையில் பணி வழங்கி வருவதாக கூறப்படுகிறது. 

இதில் மீதமுள்ள பணியாளர்களுக்கு வேலை வழங்காதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதேபோல், தொடர்ந்து, வார்டு உறுப்பினர் மீண்டும் வேலை வழங்கிய நபர்களுக்கே பணி வழங்கியுள்ளார். 

இதனால்,  ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரணி ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை தர மறுத்து பேசிய வார்டு உறுப்பினரை கண்டித்து ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், பணிமேற்பார்வையாளர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  தொடர்ந்து வேலை வழங்கவும், விசாரித்து வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் அதன்பேரில் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.