தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்டது தலைவன்கோட்டை கிராமம். இங்கு சுமார் 2500க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தலைவன்கோட்டை கிராமத்தில் அனைத்து சமுதாயத்தினரும் வசித்து வருகின்றனர். இப்பகுதிமக்களுக்கு குடிநீர் கோட்டைமலை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமே கிடைத்து வருகிறது. ஆற்றியில் இருந்து வருகின்ற குடிநீரை 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தேக்க தொட்டி மூலமாக பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் தொட்டிக்கு பதிலாக பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் அதிக கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்படுவதற்காக பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.ஆனால் பஞ்சாயத்து நிர்வாகம் பூமி பூஜை போடப்பட்ட இடத்திற்கு பதிலாக மாற்று இடத்தில் தாழ்வான பகுதியில் குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுத்து வருவதால் கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பிற்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் என்று கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி பஞ்சாயத்து தலைவர் ஷர்மிளா மற்றும் துணைத் தலைவர் குபேந்திரன் ஆகியோர் பணிகளை தொடர்ந்து செய்து வந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தலைவன் கோட்டை பஞ்சாயத்து உறுப்பினர்களான மணிகண்டன், மஞ்சுளா, ஆனந்தி, பாப்பாத்தி ஆகியோர் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.