சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் உலக இசை தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தவில் துறை மாணவர்களின் மங்கல இசையில் நிகழ்ச்சி தொடங்கி முறையே குரலிசை, தேவாரம், பரதம், வயலின், மிருதங்கத் துறை மாணவ மாணவிகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சு.சங்கரராமன் தலைமை வகித்தார். தவில் ஆசிரியர் ஆ.மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். வயலின் ஆசிரியர் இரா.அம்பிகா பிரசாத், குரலிசை ஆசிரியர் இரா.ரஞ்சினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவர் தாரை.அ.குமரவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி அக்கலைஞர்களை மரியாதை செய்வதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலக இசை தினம் 1982-ல் பிரெஞ்சு நாட்டின் கலாச்சார அமைச்சராக இருந்த ஜாக் லாங்க் மற்றும் அந்த அமைச்சகத்தில் இசை மற்றும் நடன இயக்குநராக இருந்த மாரிஸ் ஃப்ளுரெட் ஆகிய இருவரும் சேர்ந்து பேரிஸ் நகரத்தின் தெருக்களில் இந்த இசை விழாவை தொடங்கினார்கள்.
இசையின் அழகை கொண்டாடவும், தெருக்களில் தொழில் முறை இசைக்கலைஞர்களை ஒன்று சேர்க்கவும் இதன் நோக்கமாக இருந்தது. இந்த இசை தினம் இத்தாலி, பெல்ஜியம், இந்தியா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற 120 நாடுகளில் இன்றைக்கு கொண்டாடப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குடும்ப காப்பியமான சிலப்பதிகாரத்திலே இசையோடு மக்கள் மகிழ்ந்து வாழ்ந்து இருக்கின்றனர் என்பதை அறியலாம். காவேரி பூம்பட்டினத்திலே இசை அறிஞர்கள் துளைக்கருவி, தோல்க்கருவி, நரம்புக்கருவி இவைகளை இசைத்துப் பாடும் பயிற்சி பெற்ற இசை கலைஞர்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என்பதை நமக்கு தெளிவாக காட்டுகின்றது.
ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையே இனிய இசை என்பதாகும். அதனால் தான் நமக்கு பிடித்தமான பாடலை கேட்கும் பொழுது மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. மனசுக்கும் இசைக்கும் ஏராளமான தொடர்பு உண்டு. நினைவாற்றல் பெருக மனச்சோர்வு நீங்க பயம் மற்றும் கவலைகள் போக இதயத்தின் செயல்பாடுகள் சீராக மாமருந்தாக இசை விளங்குகிறது.
இசை என்பது நம்மை இசைவிக்க வைப்பது இசைந்து போகுமாறு செய்வது இசை என்பது வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறது. இன்ப நிகழ்ச்சியிலும் துன்ப நிகழ்ச்சியிலும் இசைதான் ஊக்கப்படுத்துவதாகவும் ஆறுதல் தருவதாகவும் அமைந்திருக்கிறது. மனித வாழ்வின் பிறப்பில் தாலாட்டும் இறப்பில் ஒப்பாரியும் வாழ்வின் இடையே அன்றைய மன நிகழ்விற்கு ஏற்ப இன்பத்திலோ துன்பத்திலோ பாடல்களை இசைத்து அதற்கான கருவிகளையும் இயக்கி நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர்.
கிளி, குயில் மற்ற பறவைகளிடமிருந்தும் பாட்டின் ஓசையில் கடலின் அலையிலும் வானத்து மின்னல் இடியிலும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளில் இருந்தும் இயற்கையாகவே இசையைக் கற்று பாடி வாழ்ந்து மகிழ்ந்து வந்தனர்.
இசை மனிதர்களின் வாழ்க்கையே மாற்றி இருக்கிறது. உதாரணத்திற்கு அமரர் திரைப்படக் கவிஞர் வாலி அவர்கள் சென்னையில் திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு இல்லாததன் காரணமாக மனம் மிகவும் சோர்வடைந்து வேறொரு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லலாம் என்ற நேரத்திலே அவரை பார்க்க புகழ்பெற்ற திரைப்படப் பாடகர் .ஸ்ரீநிவாஸ் அவர்கள் அவரை வந்து சந்திக்கின்றார். கவிஞர் வாலி அவர்கள் சமீபத்தில் .ஸ்ரீநிவாஸ் அவர்களை அவர் பாடிய திரைப்பட பாடல் ஒன்றை பாடச் சொல்லுகிறார். அப்போது பாடகர் ஸ்ரீநிவாஸ் “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை மயக்கமா கலக்கமா” என்ற பாடலை பாடுகிறார் அதை கேட்ட கவிஞர் வாலி பாடல்கள் எழுதும் வாய்ப்பை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையை அந்த பாடல் அவருக்கு ஊட்டியது. அவர் பின்னர் புகழ்பெற்ற பாடல்களை எழுதி இன்றைக்கும் நம் நெஞ்சில் நினைவாக நிற்கிறார்.
இசை உலகை இசையால் பூட்டி வைத்து ஆட்டி வைக்கும் ஒலிகளுக்குள் சுகத்தை தந்து சாகாவரம் பெற்றவையாக நின்றிருக்கும். இசை இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் இலவசமாக இறைவன் தந்தது ஆகும்.
புதுமையான இசைகளை உண்டாக்கி மக்கள் கேட்டு ரசிக்க வேண்டும் என்பதே உலக இசை தின விழாவின் நோக்கமாகும்.
சமீபத்தில் நம் தென்னிந்தியாவில் ஆந்திரா திரைப்படத்தில் பாடப்பட்ட “நாட்டு நாட்டு” என்ற பாடல் உண்மையான நாட்டுப்புற பாடலாக தேர்வு பெற்று 2023 க்கான உலகம் போற்றும் ஆஸ்கர் விருதினை பெற்றது என்பதே இசைக்கு மொழி இல்லை என்பதனை உலகம் தெரிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்தது எனலாம்.
உலகத்திலே பல்வேறு வகையான பாடல்கள் பாடபடுகின்றது. இந்தியாவில் மட்டும் வடக்கே இந்துஸ்தானி என்ற இசையும் நாம் வாழும் தெற்கு பகுதியில் கர்நாடக இசையும் பாடப்படுகிறது. கர்நாடக இசை என்பதே நம் தமிழ் இசைதான் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழிசை கர்நாடக இசை என்று பெயர் மாற்றம் பெற்றது.
உலக மொழிகளில் நம் தமிழ்மொழி மட்டுமே இயல், இசை, நாடகம் என்ற முக்கூறுகளையும் தன்னிடத்தே கொண்ட ஒரே மொழி ஆகும். நம் தமிழ்மொழியில் தமிழ் இசையை பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இசைத்து வருகின்றனர். ஆனால் இவ்வாறு காலந்தோறும் வழிவழியாக வந்த தமிழிசை இடையில் ஒரு சவாலை எதிர்கொண்டது. மேடையில் தமிழிசை குறையத் தொடங்கியது. பின்னர் ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார், ஆர்.கே.சண்முகம் செட்டியார், கல்கி, இராஜாஜி போன்ற சான்றோர்களின் பெரும் முயற்சியால் தமிழிசை புத்துயிர் பெற்று தொடர்ந்து வளர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும் மற்றும் தமிழக அரசே மாவட்டம் தோறும் அரசு இசைப்பள்ளியைத் தொடங்கி இசை வளர்ச்சிக்கான பெரிய முயற்சியை செய்வது மிகவும் பாராட்டுக்குரியதாகும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் நாதஸ்வர ஆசிரியர் இராமமூர்த்தி, மிருதங்க ஆசிரியர் சுவாமிநாதன், பரதம் ஆசிரியை ர.ரமாதேவி, சந்திரசேகர் ஓதுவார் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களும், இசை கலைஞர்களும் கலந்து கொண்டனர்.