கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையம் அருகில் மகளிர் திட்டத்தின் வாயிலாக பூமாலை வணிக வளாகம் செயல்பட்டு வந்தது. இந்த வணிக வளாகத்தினை புதுப்பித்து நவீன படுத்தும் வகையில் ரூ.35 லட்சம் மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நிறைவடைந்த நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் காணொலி காட்சி வாயிலாக பூமாலை வணிக வளாகத்தை திறந்து வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து வடசேரி வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி அரங்குகளை பார்வையிட்டு. வணிக வளாகத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் சார்பாக தங்களது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள்.

மறு சீரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தில் தற்போது 11 கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சார்பில் தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலைவாழ் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட சுத்தமான தேன். மஞ்சள். கிராம்பு, கைவினை பொருட்களான பானை ஓலை பொருட்கள், தேங்காய் பொம்மைகள், வாழை நார் பொருட்கள், கடல் சிற்பி பொருட்கள், பர் துணி பொருட்கள், உணவு வகைகளான சிறு தானியங்கள், பயிறு வகைகள். கிழங்கு வகைகள். உலர் மீன்கள். ஜூஸ் வகைகள், ஊறுகாய் மற்றும் துணி பைகள், சோப்பு, பொடிகள், மண்பாண்ட பொருட்கள், சணல் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. மேல் தளத்தில் ஒரு கூட்டரங்கமும் செயல்பட்டு வருகிறது.

நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்

ஆனந்த் மோகன்,  மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், திட்ட இயக்குநர்கள் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), மு.பீபீஜாண். மாநகராட்சி துணை மேயர் .மேரி பிரின்சி லதா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அசன், மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் கலாராணி. காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ஆனந்த், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வழக்கறிஞர் சரவணன். இராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகபாய், ராஜா, மகளிர் திட்ட உதவி அலுவலர் முருகன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள். மகளிர் சுய உதவி குழுக்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்