தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஸ்பிக்நகர் பகுதி திமுக சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக, ஓட்டபிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வந்திருந்தார். பின்னர் கூட்டம் நிறைவடையும் வரை இருந்து விட்டு கடைசியாக அவர் கிளம்பினார். அப்போது, அத்திமரப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், அத்திமரப்பட்டியில் புதியதாக கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டுமென எம்எல்ஏ-விடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு முதலமைச்சர் காணொளி மூலமாக திறக்கும் திட்டம் உள்ளது. இதை விரைவில் திறக்க அமைச்சரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஸ்பிக்நகர், அத்திமரப்பட்டி, குலையன்கரிசல் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தூத்துக்குடி – திருச்செந்தூர் மெயின் ரோடு மற்றும் ஸ்பிக்நகர் பகுதியில் விபத்து ஏற்பட்டால், பல சமயங்களில் ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விடுகிறது. எனவே, ஸ்பிக்நகர் பகுதியில் 108 ஆம்புலன்ஸை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அது சம்பந்தமான மனுவையும் அளித்தனர். உடனடியாக சண்முகையா எம்எல்ஏ., அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், ஸ்பிக்நகர் பகுதியில் 108 ஆம்புலன்ஸை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அப்போது ஸ்பிக்நகர் பகுதி திமுக செயலாளர் ஆர்.ஆஸ்கர், கூட்டுறவு வங்கி தலைவர் வி.பி.ஆர்.சுரேஷ், குலையன்கரிசல் விவசாயிகள் சங்க தலைவர் டி.வி.எச்.ஜெகன், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷண்ன, வட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், வசந்தி பால்பாண்டி, மைக்கேல், கருப்பசாமி மற்றும் ஜெ.செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.